×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உற்சவம் 10 நாட்கள் நடப்பது சிறப்புக்குரியது. அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன், மாலை 5 மணியளவில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து வரும் 19ம் தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். தினமும் இரவு நேரத்தில், சுவாமிக்கு மண்டகபடியும் நடைபெறும்.

விழாவின் நிறைவாக, வரும் 19ம் தேதி  காலை 10 மணிக்கு திருவண்ணாமலை ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோயிலில் மண்டகபடியும் நடைபெறும். இரவு 10 மணியளவில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும். சிவாலயங்களில் மன்மத தகனம் நடைபெறும் தனிச்சிறப்பு அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Chithira ,Thiruvannamalai Annamalaiyar , Thiruvannamalai, Annamalaiyar Temple, Chitta Vasantha Utsavam
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு